Monday, January 26, 2009

இந்திய விடுதலை வீரர் அல்லாமா கரீம் கனி

இந்திய துணை கண்டத்தின் விடுதலை வீரர்களில் ஒருவர் அல்லாமா கரீம் கனி.

இளையாங்குடி-சோதுகுடியில் கி.பி. 1907ல் முஹம்மது இபுறாஹீம் அவர்களின் மகனாக பிறந்தார். செய்யது அஹமது கபீர் ரிபாயி ஆண்டகையின் வழி வந்த ஐத்ரூஸ் என்னும் பெரியாரின் கொள்ளுப் பேரராவார்.

இளமையிலேயே அபார நினைவாற்ற‌ல் பெற்றிருந்த கரீம் கனி ஒரு நாள் ஜும்ஆ தொழுகையில் இமாம் "
அல்காஷியா" சூராவை ஓத அதை அப்படியே மனதில் பதித்துக்கொண்டு வீடு வந்ததும் தம் தந்தையிடம் ஓதிக் காட்டினார்.

அது கண்டு மகிழ்ந்த தந்தை அவரை ரங்கூன் செய்ன்ட் பால்ஸ் ஆங்கில பள்ளியில் சேர்த்தார். ஒவ்வொரு வகுப்பிலும் " ட‌புள் பிரமோஷன் " பெற்று சில ஆண்டுகளில் எட்டாம் வகுப்பை அடைந்தார்.

அப்பொழுது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரை இலங்கைக்கு அனுப்பி 'லண்டன் மெட்ரிக்' படிக்க செய்தார். அங்கு அதனை படித்துவிட்டு லண்டனுக்கு சென்று 'ஐ.ஸி.எஸ்" நோக்குடன் ப்ர்மா திரும்பிய பொழுது தந்தை திடீர் என காலமாகி விடவே அது நிறைவேறவில்லை.

அதன்பின் சுருக்கெழுத்து பயின்று ' ரங்கூன் டெய்லி நியூஸ் ' பத்திரிக்கையில் நிருபராக திறம்பட பணியாற்றினார். 'உதய சூரியன்' எனும் பெயரில் ஒரு வார இதழை வெளியிட்டு அதன் மூலம் சமுதாய பணி
 
புரிந்தார்.

அப்பொழுது இளைஞர் முஸ்லீம் லீக்  சோலியா முஸ்லீம் லீக் தேகாப்பியாச சங்கம் ஆகியவற்றை தொடங்கி இளைஞர்களுக்கு பயிர்ச்சி அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

இந்தியாவில் மீலாத் விழா முதன் முதலாக கொண்டாடிய பொழுது ரங்கூனில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்து 1930ல் மிகப் பெரிய ஊர்வலத்தை நடத்தி ஜூப்ளி மன்றத்தில் மீலாது விழாவை சீரும் சிறப்புமாக  நடத்தி வெற்றி கண்டார்.

பர்மா சட்டசபை உறுப்பினராக தேர்தலில் நின்று  தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாமா கரீம் கனி அமைச்சர‌வையில் பார்லிமெண்டரி செயலாளராக பணியாற்றினார்.

அப்பொழுது 25 வயதே ஆன அல்லாமா கரீம் கனி ( 1934 ) நான்கு மாதங்கள் வட தென் இந்தியா சுற்றுப் பயணம் செய்து நாட்டின் சமூக நிலைகளை நன்கறிந்து கொண்டார்.

தென் கிழக்காசியாவிலேயே சிறந்த மார்க்க மேதைகளில்  ஒருவராக திகழ்ந்தவர். அல்லாமா கரீம் கனி

இந்திய விடுதலை வீரர் மௌலானா முஹம்மது அலி  இந்திய விடுதலை வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வலக்கரமாக திகழ்ந்தவர் அல்லாமா கரீம் கனி.

" மகாத்மா காந்திக்கு உலகம் அடக்கம் அந்த மகாத்மா இந்த மௌலானா முஹம்மது அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்." --பெரியார்.

"நான் இந்த ( மௌலானா முஹம்மது அலி ) வீரத்தலைவரை வெகுவாக  மதிக்கிறேன். இந்தியாவின் விடுதலைக்காக அவர் செய்துள்ள தியாகங்களும் ஆற்றிய அரும்பெறும் தொண்டுகளும் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் தங்க மை கொண்டு எல்லாவற்றையும் விட மிக முக்கியமான இடத்தில் எழுதப்படும் " -நேருஜி.

1929 ஆம் ஆண்டு மியன்மாரின் தலைநகரான ரங்கூனுக்கு ( யாங்கூன் ) வந்திருந்தார் மௌலானா முஹம்மது அலி . அப்பொழுது ஒரு நாள் மௌலானா முஹம்மது அலியும்  அவர்  தம் தோழர்களும் புடை சூழ புகழ் பெற்ற ' ரங்கூன் டெய்லி நியூஸ் " பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று அப்பத்திரிக்கையின் ஆசிரியரை சந்தித்து இன்று உங்கள் பத்திரிக்கையில் என்னுடைய பேச்சு ஏழு பத்தியில் பிரசுரமாகியிருக்கின்றது.

அந்த செய்தியைஉங்கள் பத்திரிக்கைக்கு தொகுத்து கொடுத்தது யார் ? என்று கேட்டதும்  ஆசிரியருக்கு ஏதொ தவறு நடந்துவிட்டதோ என அஞ்சி  திகைத்துப் போய் ' முஸ்லீம் இளைஞர் ஒருவர் தான் செய்தியை தந்தார். அவர் முன் எங்களிடம் நிருபராக இருந்தவர். அவர் எழுதி தந்த செய்தியை அப்படியே வெளியிட்டோம். அதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும்" என பரிவோடு கேட்டுக்கொண்டார்.

இதை கேட்டதும் மௌலானா முஹம்மது அலி வாய் விட்டு சிரித்து விட்டார். " நான் உங்களுக்கும் அந்த நிருபருக்கும் நன்றி சொல்ல  வந்திருக்கின்றேன். நான் பேசிய பேச்சுக்கள் இந்தியாவிலும் வெளிநாடுக்ளிலும் உள்ள ப புகழ் பெற்ற பத்திரிக்கைளிச் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை இது போன்று முழுமையாக வந்ததில்லை. ஒரு பகுதி வரும். அதுவும் தப்பும் தவறுமாக உறுக்குலைந்து போய் இருக்கும்.

ஆனால் இச்செய்தியை பார்த்ததும் என்க்கு மிக மன் நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.எனவே உங்களையும்
 
உங்கள் நிருபரையும் பாராட்டி போகத்தான் வந்துள்ளேன்" என கூறியதோடு  மௌலானா தான் தங்கியுள்ள முகவரியை கொடுத்து கட்டாயமாகத் தங்கள் நிருபரை என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள்" என கூறி விடை பெற்றார்..

மாறு நாள் அதிகாலையில் மௌலானா தம் தோழர்களுடன் சுவையான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு 22 வயதே நிரம்பிய ஓர் இளைஞர் முன்தோன்றி " நான் தான் கரீம் கனி ரங்கூன் டெய்லி நியூஸ் பத்திரிக்கை அலுவலகத்திற்கு என்னை தேடி வந்ததாக சொன்னார்கள்." என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இதை கேட்டதும் " நீங்களா அந்த் நிருபர்? என ஆச்சரியத்தோடு கேட்டு கட்டி அனைத்து முத்தமிட்டார் மவ்லானா. பின் அவர் தன் அருகில் அமர்த்திக்கொண்டு " என் ஆங்கில பேச்சைக் கூட ஒரு சில பத்திரிக்கையாளர்கள் ஓர் அளவு  குறிப்பெடுத்துவிடுவார்கள். ஆனால் எனது உருது பேச்சை இதுவரைக்கும் யாரும் முழுமையாக எடுத்ததை நான் பார்த்தில்லை. ஆனால்  நான் சென்ற வெள்ளிக்கிழமை சூரத் பள்ளிவாசல் ஜும்மாவில் உருதுவில் பேசியதை அப்படியே அனுக்குலையாமல் ஒரு வார்த்தை கூட விடாமல் எடுத்து அதை மிகவும் திறமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தீர்கள்.
அதை என்னால்  பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நல்ல வேலையாக நீங்களே இங்கு வந்துவிட்டடீர்கள்.வரும் வெள்ளிக்கிழமையன்று சோலியா பள்ளியில் உருதுவில் பேசுகிறேன். அதை தாங்கள் தமிழில் மொழி பெயர்த்து பேச வேண்டும்." என மவ்லானா கேட்டுக் கொண்டார். அதை கரீம் கனி ஏற்றுக் கோண்டார்.

ரங்கூன் ( யாங்கூன் ) மாநகரத்தில் பெறிய ஜும் ஆ பள்ளிவாசல்கள் இரண்டு உண்டு. அவற்றில் ஒன்று சூரத்தி
 
முஸ்லீம்களுக்கும் மற்றொன்று தமிழ் முஸ்லீம்களுக்கு அதாவது சோலியா முஸ்லீம்களுக்கு.அவற்றில் ஏக காலத்தி ஆயிரக்கணக்கானோர் அடுக்கு மாடியுடன் அவை அமைந்துள்ளன.

ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் 1937 வரை இந்தியாவின் ஒரு மாகாணமாக பர்மிய நாடு ( மியன்மார் ) இருந்து வந்ததால் அங்கு இந்தியர் தாங்களின் தாய் திருநாட்டின்  ஒரு பகுதியாக அதை கருதினர்.

எனவே காட்டை கழனியாக்கி விவசாயிகளாகவும் வியாபாரிகளாகவும் தோட்டிகளாகவும் ழிலாளிகளாகவும் அதிகாரிகளாகவும் சுமார் மூன்று லட்சம் இந்தியர்கள் குடியேறி வாழ்ந்து வந்தன்ர்.

இவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள்; அதிலும் சிறப்பாக தமிழ் முஸ்லீம்களாவர் சோலியா முஸ்லீம்கள் என்று அங்கே அழைக்கப்பட்டார்கள்.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னே சோழ நாட்டிலிருந்து முதல்முதலாக குடியேறிய தமிழ் முஸ்லீம்களை 'சோலியா முஸ்லீம்கள்" என்ற அடை மொழியால் அழைத்தார்கள். தொடர்ந்து அங்கு குடியேறிய எல்லா தமிழ் முஸ்லீகளையும் சோலியா முஸ்லீம்கள் என்று அழைக்கத்தொடங்கினர்.(இதே நிலைதான் சிங்கப்பூர் மலேஷியாவிலும். சிங்கப்பூர் பினாங்கு கோலாலம்பூர் மற்றும் மலேஷியாவின் நகரங்களில் சோலியா
 
ஸ்ட்ரீட் CHULIA STREET  சோலியா மஸ்ஜித்கள் CHULIA MASJID) அந்த வம்சாவளியில் ஒருவராக திகழ்ந்தவர் தான் அல்லாமா கரீம் கனி.

அதன் பின் சிறிது காலத்தில் மௌலானா முஹம்மது அலி அவர்கள் காலமாகிவிட்டார்கள். மௌலானா முஹம்மது அலி அவ‌ர்க‌ளின் ம‌றைவு க‌ரீம் க‌னிக்கு பெரும் வ‌ருத்த‌த்தை த‌ந்தாலும் விடா முய‌ற்ச்சியால் மௌலானா முஹம்மது அலி ஜ‌ன‌ஹ‌ர் சென்ற‌ அதே வ‌ழியில் சென்று வெற்றியும்  பெற்றார்.

பின் இந்திய‌ சுத‌ந்திர‌ கழக‌ம் என்ற‌ அமைப்பினை நிறுவி  விடுத‌லைக்காக‌ தீவிர‌மாக‌ பணியாற்ற‌‌த் தொட‌ங்கினார். ர‌ங்கூனில் வெளியான‌ 'தேச‌வுப‌காரிஎன்ற‌ ப‌த்திரிக்கையில் கூட்டு ஆசிரிய‌ராக‌ ப‌ணிபுரிந்தார்.

அவ்வ‌மைய‌ம் நேதாஜி சுபாஷ் ச‌ந்திர‌ போஸின் புர‌ட்சிக் கருத்துக்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டார்.

காங்கிர‌ஸ் க‌ட்சியில் த‌லைமை பொறுப்பை உத‌றித் த‌ள்ளிவிட்டு ஜெர்ம‌னியின் ஹிட்ல‌ரோடும் ஜ‌ப்பானிய‌ அர‌சோடும் பேச்சு ந‌ட‌த்தி விட்டு 1943 ஜூலை 3 ல் போஸ் சிங்க‌ப்பூர் வ‌ந்தார். வந்த‌ ம‌று நாள் இந்திய‌ சுத‌ந்திர‌ப் ப‌டை ( ஐ.என்.ஏ.)யின் ரானுவ‌த் த‌ள‌ப‌தியானார். முற்றிலுமாக‌ தென் கிழக்காசியாவில் வாழ்ந்த‌ இந்திய‌ர்க‌ளை கொண்டே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌டை அது.

பர்மாவின் சுதந்திர கழகத் தலைவராக இருந்த  அல்லாமா கரீம் கனி ஜூலை4ம் தேதி நடைபெறவிருந்த ஒரு மகாநாட்டில் கல்ந்து கொள்ள சிங்கப்பூர் வந்திருந்தார். அவர் ஜூல 8ம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்தார். அதன்பிறகு இரு புரட்சித் தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மறு நாள் இரங்கூனுக்கு சென்ற கரீம் கனி ' ஆஜாத் ஹிந்து அரசு " பிரகடன விழாவில் கலந்து கொள்ள மீண்டும் சிங்க‌ப்பூர் வந்தார்.

சிங்க‌ப்பூர் நகராட்சி திடலில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் அல்லாமா கரீம் கனி தனக்கே உரித்தான அமுதத் தமிழில் உரையாற்றினார்.

இது உலகில் வேறெந்த தமிழனுக்கும் கிடைத்திராத அற்புதமான பெருமை.

அல்லாமா கரீம் கனி நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்க்கு நெருக்கமாகி இந்திய சுதந்திர அரசின் ஓர் அமைச்சராக பொறுப்பேற்று போஸின் வலது கரமாக பணியாற்றினார்.

இந்த‌ அர‌சின் த‌லைமைய‌க‌ம் ர‌ங்கூனுக்கு மாற்றப் ப‌ட்ட‌தால் இருவ‌ருக்கும் நெருக்க‌ம் இறுக்க‌மான‌து. இத‌னால் அல்லாமா க‌ரீம் க‌னியின் ஆழ்ந்த‌ நாட்டுப் ப‌ற்றையும் வ‌ர‌விருக்கும் நிக‌ழ்ச்சிக‌ளை முன் கூட்டியே க‌ணிக்கும் ஆற்ற‌லையும் க‌ண்டு விய‌ந்தார் போஸ்.

இம்பால் ப‌டையெடுப்பில் ஏற்ப‌ட்ட‌ இழப்பால் ம‌க்க‌ளூம் ப‌டை வீர‌ர்க‌ளும்  சோர்வ‌டைந்திருந்த‌ன‌ர். சோர்வை நீக்க‌ ர‌ங்கூனில் 1944 ஜூலை 4ம் தேதி முத‌ல் 11ம் தேதிவ‌ரை " நேதாஜி சுபாஷ் ச‌ந்திர‌ போஸ் வார‌ம் கொண்டாட‌ செய்தார். அதில் ம‌கிழ்ச்சியும் கிளர்ச்சியும் பொங்கும் ஒரு நாட‌க‌த்தை அல்லாமா கரீம் க‌னி ந‌ட‌த்தினார். அதன் மூலம் சுதந்திர உணர்வு பாதுகாக்கப்பட்டது.

ரங்கூனில் தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையில் அல்லாமா கரீம் கனி 1945 ஏப்ரலில் பேங்காக் சென்றார். அங்கேதான் கடைசியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸை ஆகஸ்ட் 17ம் தேதி சந்தித்தார்.அப்போது " பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்று பேச்சை தொடங்கி அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார்.

பிரிட்டிஷார் போரில் ஜப்பானிடம் இழந்த‌ மலேயா சிங்கப்பூரை மீண்டும் கைப்பற்றிய பொழுது அல்லாமா கரீம் கனியையும் கைது செய்தனர்.

பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர் மீண்டும் பர்மா திரும்ப மனமில்லாது

சிங்க‌ப்பூர் வந்தார். வியக்த்தக்க வகையில் 28 நாட்களில் மலாய் மொழியில் பேசவும் எழுதவும் அனல் தெறிக்க சொற்பொழிவுகள் ஆற்றவும் திறமை பெற்றார். சிங்கப்பூர் ' மலேயா நன்பன் ' பத்திரிக்கையின் ஆசிரியரானார்.அத்துடன் மலாய் மொழியிலும் ஒரு பத்திரிக்கை நடத்தினார்.

இரு மொழி பத்திரிக்கைகளின் மூலமாக இந்திய வம்சாவழி மலாய் வம்சாவழி முஸ்லீம்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வுகளையும் உருவாக்கி அது வரை இருசாராரும் ஒருவர் இன‌த்தினை மற்றொருவர் இனம் தாழ்ச்சியாக எண்ணி உறவாடிக் கொண்டிருந்த சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்

போர்க்காலத்தில் ஒரு ஹாலந்து( DUTCH) தம்பதியர் தம் பெண் குழந்தை ஒன்றை சிங்க‌ப்பூரில் விட்டுவிட்டு
 
தங்கள் நாடு திரும்பி விட்டார்கள். அக்குழந்தையைஒரு மலாய் முஸ்லீம் குடும்பம் " நாதிரா" என பெயரிட்டு இஸ்லாமிய முறைப்படி வளர்த்து ஆளாக்கி ஒரு முஸ்லீமுக்கு திருமணம் செய்து வைத்த‌ பின்னர் நாதிராவை எங்களிடம் திரும்பக் கொடு என்று கேட்ட பொழுது சிங்க‌ப்பூரில் இருந்த கிறிஸ்தவ அமைப்புகளும் ஒட்டு மொத்தமாக பெற்றோர்களுக்கு தூபம் போட அன்றைய பிரிட்டீஷ் ஆட்சியாளர்களும் ஒத்துழைத்து .குழ்ந்தை மைனராக இருந்தபொழுது மதமாற்றமும் திருமணமும் நிகழ்ந்ததால் அவை செல்லத்தக்கதல்ல என்றும் நாதிரா பெற்றோரிடமே திரும்பிட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நாதிரா ஒரு கிறிஸ்தவ அமைப்பில் ஒப்படைக்க செய்து விட்டார்கள்.

உணர்ச்சிகளால் உந்தப்பட்டு கொதித்தெழுந்து இந்த தீர்ப்பை  அக்கிரமங்களை எதிர்த்து அல்லாமா
 
கரீம் கனி தம் இரு மொழி பத்திரிகைகளில் எழுதியதுடன் பள்ளிவாயில்களிலும் மலாய் மொழியிலும் தமிழிலும் அனல் பறக்கும் சொற்பொழிவாற்றினார். அதன் காரணமாக மலேயா சிங்கப்பூரில் மலாய் இந்திய முஸ்லீம்கள் ஒன்றிணைந்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட இரத்தம் சிந்தப்பட்டு பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்து அல்லாமா கரீம் கனி கைது செய்யப்பட்டு சிங்க‌ப்பூரில் சிறையிலடைக்கப்பட்டார்.

பின்னர் பிரிட்டீஷார் மலேயாவுக்கு சுதந்திரம் அளிக்கக்கூடிய தருணத்தில்மலேயாவின் தலைவர்களின் முயற்ச்சிகளால் பிரிட்டீஷார் கரீம் கனியை விடுதலை செய்து பர்மா அல்லது இந்தியாவுக்கு செல்ல அனுமதித்தனர்.

இந்த இரு நாடுகளும் இந்த தியாக செம்மலை ஏற்றுக் கொள்ள மறுத்ததினால் இறுதியாக அரசியலில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பாக்கிஸ்தான் கரீம் கனியை ஏற்றுக் கொண்டது.

அல்லாமா கரீம் கனி திருக்குரான் ஹதீஸ் ஆராய்ச்சியில் மிகவும் திளைத்தவர். இஸ்லாம் மார்க்க சேவைக்கு தன்னை அர்ப்பணித்தவர்.

அல்லாமா கரீம் கனி தமிழ் மலாய் ஆங்கிலம்உருது அரபி பார்ஸி ஆகிய புலமை பெற்றவர். மிகவும் விரைவாக எழுதும் ஆற்றல் பெற்ற இவர் தேநீர் அருந்திக்கொண்டு  நிலக்கடலை சாப்பிட்டுக்கொண்டே
பத்திரிக்கைக்காண செய்திகள் அனைத்தையும் எழுதி முடித்துவிடுவார். இவர் எழுதிய நூல்கள் சந்நிதானம் அல்லது மூஃமினின் மிராஜ் முஸ்லீமின் முறைப்பாடுஜோதிஆன்ம சூரியன்முஹ்யிதீன் மான்யம்பிரளய சகாப்தம் ஆகியவை.

அல்லாமா க‌ரீம் க‌னியின் அருமை பெருமைக‌ளை தெரியாத‌ க‌ராச்சி ம‌க்க‌ளிடையே வ‌றுமையோடு வாழ்ந்து 22.6.1978ல் ம‌றைந்தார் சோதுகுடி தந்த மாணிக்கம்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
 
http://www.ilayangudi.org/ily/news.php

 

No comments: