Monday, July 21, 2008

பணம் பணமறிய அவா!

கவிதை
ஜாபர் ஸாதிக் பாகவி

பணம் பணமறிய அவா!

•அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணை தேசங்களில்
எறிந்து கொண்டிருக்கிறோம்!

•அடி வயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெறிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்!

•கண்தெரியாத தேசத்தில் விழுந்து
காயங்களில் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

•மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!

•ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

•நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?

•ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்....

•உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளை பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகந்த வாழ்கை?

•கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்த்தைகள்...

•நம்மில் பலபேருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணைமுறையில்தான்
தட்டுப்படுகிறது…

•தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுந்கலுமாய்…
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது.

•மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இந்த ஏ.சி காற்று தருவதில்லை!

•குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்த தீவுக்களில்…

•வீடுகூடும் நிஜம் தொலைந்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்…?

•உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்…!

•என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி?

•ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவறையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர…!

•காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மைக் கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

•பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கிறோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக…

•வாழ்கையின் பாதி
விரக்தியிலும், விரக தீயிலும்
எறிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்…

•என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார்?


நன்றி: இமான் வெள்ளி விழா மலரிலிருந்து


அகமது கபீர்
கோவிந்தகுடி