Sunday, January 25, 2009

காகிதப் புலிகளின் புதிய ஒப்பாரி.

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள காஸாவின் ஓலம் கேட்ட முஸ்லீம் சகோதரர்களுக்கு 100 மைல்களுக்கப்பால் உள்ள வன்னித்தமிழனின் ஓலம் கேட்கவில்லை. !! – நிதர்சனம்.கொம் 16.1.2009

ஆமை சுடுவது மல்லாத்தி.அதை நாம சொன்னாப் பொல்லாப்பு. என்று எங்கட உம்மம்மா ஓரு கதை சொல்லுவா.அப்படி இருக்கிறது சாணக்கியர்களின் ஓலம்.

ஆம். 3500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் காஸாவுக்காக கூக்குரல் இடுகின்றீர்களே ! 100மைல்களுக்கப்பால் இருக்கும்; எங்களுக்காகவும் கொஞ்சம் அழுவுங்களேன் ! ? என்கின்றனர் எமது ஜாம்பவான்கள்.

என்னத்தை சொல்வது.
எப்படி சொல்வது.
எங்கிருந்து ஆரம்பிப்பது.
எப்படி ஆரம்பிப்பது.
அழுதழுது எழுதுவதா ?
வெம்பி வெடித்து எழுதுவதா ?

1991இல் மன்னார் முருங்கன் பள்ளிவாசலில் இறந்த முஸ்லீம்களின்; உறவினர்களும், எரிக்கப்பட்ட கடைகளின் சொந்தக்காறர்களும் இன்னும் அக்குறணை, மாத்தளை, மடவளையில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைச் சொல்வதா ? அல்லது அப்போது சிறிலங்காவின் முதலாவது முஸ்லீம் உதவி அரசாங்க அதிபராக இருந்த “மகுறுப்”; உங்களால் சுட்டுக் கொல்லப்பட்டும் இதுவரை விட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அக்குடும்பத்தின் அவலத்தைச் சொல்வதா ?

காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்களைச் சுட்டுக்கொன்று சப்பாத்துக்கால்களால் குரான்களை எட்டி உதைத்து எள்ளி நகையாடியதைச் சொல்வதா ? அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்குள் நுழைந்து அப்பாவி முஸ்லீம்களைக் கொன்று வீதியில் சென்று கொண்டிருந்த 16 முஸ்லீம்களை கைகளை கட்டி சுட்டும் , பசியடங்காமல் வெட்டியும் கொன்றஅந்த சூரசம்ஹாரத்தைச் சொல்வதா ??

பொத்துவில் பாணமை முதல் மூதுர்,கிண்ணியா,தோப்புர் வரை உள்ள முஸ்லீம்களை அவர்களது வயல்நிலங்களைவிட்டு விரட்டியடித்து அவர்களை சோத்துக்கு வழியில்லாதவர்களா க்கி வெறும் வயிற்றுக்காறர்களாக்கிய அந்த சோகத்தைச் சொல்வதா ?

கடந்த 15 வருடங்களாக உங்களிடம் வயல்நிலங்களை இழந்த அந்த ஏழை முஸ்லீம் விவசாயிகள் வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக வளைகுடா நாடுகளில் “அரபிக்களின் கக்கூசுகளைக்” கழுவிக்கொண்டிருக்கும் அகோரத்தைச் சொல்வதா ?

யாழ் மாவட்டத்தில் இருந்த 91ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களை உடுத்த துணியுடன் வெளியேற்றி அந்த அப்பாவி மக்களை புத்தளம் முதல் கொழும்பு ,வேருவளை வரை பிச்சை எடுக்க வைத்து சிறிலங்கா வாழ் மொத்த சோனியையும் பைத்தியக்காறர்களாக்கிய அந்ததான்தோன்றித்தனத்தைச் சொல்வதா ?

எதைச் சொல்வது ! எதை விடுவது !!

“அயல்வீட்டாரையும் உன்குடும்பத்தார் போல் நேசி” என்று சொல்கின்ற மதம் இஸ்லாம்.அடுத்த வீட்டுக்காறன் பசித்திருக்கும் போது நீ உன்னிடம் உள்ள உணவில் ஒரு பகுதியை அடுத்த வீட்டுக்காறனுக்கு கொடு என அறுதியிட்டு சொன்ன மதம் இஸ்லாம்.

நீ எந்த அரசின் கீழ் வாழ்கின்றாயோ, அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நட என உறுதிபட சொன்ன மதம் இஸ்லாம்.அதற்காக கொத்தடிமையாக வாழச்சொல்லவில்லை. உனது தொழில்,உனது மார்க்கக் கடமையைச் செய்ய ஒரு இடம் (பள்ளிவாசல் ) இருந்தால் போதும் என்று உறுதிபடவும் சொன்ன மதம் இஸ்லாம்.

அந்த புண்ணிய மதத்தை தழுவிய முஸ்லீம்கள்தான் சிறிலங்காவில் வாழ்கின்றனர். நாம் சிறிலங்காவில் எந்தப்பகுதியில் வாழ்கின்றோமோ அந்தப் பகுதி மக்களுடன் கைகோர்த்து சகஜமாகத்தான் வாழ்கின்றோம்.வாழ்ந்தோம்.

காலியில் உள்ள முஸ்லீம்கள் சிங்கள “பெரஹர” காலத்தில் எப்படி சிங்கள மக்களுடன் சேர்ந்து பெரஹர கொண்டாடினார்களோ அதே போல்தான் வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் பொங்கல்,தீபாவழி,சித்திரை காலங்களில் தமிழ் மக்களுடன் சேர்ந்து மோதகம்,அவல்,சக்கரைப்பொங்கல் என உண்டு,உறங்கி வாழ்ந்தோம்.இப்போதும் வாழ்கின்றோம்.

அதுமட்டுமா ?தமிழ் இளைஞர் பேரவை காலத்திலிருந்தே வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் இலைமறை காய்களாக இளைஞர்களும், வியாபாரிகளும் சகல விடுதலை அமைப்புக்களுக்கும் உதவி செய்தார்கள்,

அப்போது நீங்கள் ஆயுதங்கள் வாங்க அல்லாடிய போதும், இந்தியாவுக்கு உங்களை பைபர்கிளாஸ் போட்டுகளில் ஏற்றி இறக்கவும், உங்கள் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தவும் ,உங்கள் உறுப்பினர்கள் பிடிபட்டால் பாதுகாப்பு படையினரிடம் பேரம் பேசி அவர்களை மீட்கவும் உதவினார்கள்.

இப்போது கொழும்புக்கு தமிழர்கள் வர பாஸ் வேண்டும் என அரசு அறிவித்த போதும் கூட வவுனியாவில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பாஸ_ம் எடுத்து கருவாடு, புகையிலை லொறிகளில் கூட்டி வருபவர்களும் அதே முஸ்லீம்கள்தான்.

ஐரோப்பிய, அவுஸ்திரேலிய,அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள 99வீதமான தமிழ் பெண்கள் முஸ்லீம்களின் பாரம்பரிய உடையான பர்தா அணிந்து , முஸ்லீம்களின் துணையுடன்தான் கவுரவமாக வந்து சேர்ந்தனர். வந்துகொண்டும் இருக்கின்றனர்.

இப்போது புதுசாக நாம் வன்னித்தமிழர்களுக்கு குரல்கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. அந்த அப்பாவி மக்களுக்கு தெரியும் எம்மைப்பற்றி.சிறிலங்காவில் ஒவ்வொரு கிராமத்திலும் சுருட்டுக்கடை, புகையிலைக்கடை ,சில்லறைக்கடை வைத்திருந்த அந்த மக்களுக்கும், எங்களுக்கு எழுத்தறிவித்த அந்த வடமாகாண ஆசிரியர்களுக்கும், கதிர்காமத்திற்கு நடை பயணம் போகும் போது முஸ்லீம் கிராமங்களில் தங்கி நின்று, ஒரு கவளம் தண்ணீர் குடித்துப்போன அந்த வன்னித்தமிழனுக்கும் தெரியும் சிறிலங்கா சோனியின் அன்பும, அரவணைப்பும்.

ஆசிரியர்களாக , பொலீஸ் அதிகாரிகளாக , தபாலதிபர்களாக ,நீதிமான்களாக எங்கள் ஊர்களில் கடமையாற்றி , எங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து ஓய்வு நேரங்களில் எங்களுக்கு ஆங்கிலமும் , பஞ்சதந்திரக் கதைகளும் சொல்லித்தந்த அந்த மாமனிதர்களுக்கு தெரியும் சிறிலங்கா முஸ்லீம்களின் மதமும் , மந்திரமும்.

படித்த பட்டதாரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றாராம். கிராமத்தில் ஒரு குடிசைக்கு முன்னால் ஒரு மாடு சூடு மிதித்துக்கொண்டிருந்ததாம். மாட்டிற்குப்பக்கத்தில் யாருமே இல்லையாம். இவர் மாட்டிற்குப்பக்கத்தில் போய் பார்திதிருக்கின்றார்.யாருமே இல்லை. இவர் உடனே குடிசைக்குப்பக்கத்தில் போய் எட்டிப் பார்த்திருக்கின்றார்.அங்கே கிராமத்தான் சாக்குக் கட்டிலில் படுத்து பாட்டுப்பாடிக் கொண்டிருந்திருக்கின்றான். இவர் உடனே அவனை தட்டி கூப்பிட்டு நீ இங்கே படுத்துக்கொண்டிருக்கின்றாயே ! மாடு தனியே சுற்றிக் கொண்டிருக்கிறதே ! அது சுற்றாமல் நின்று விட்டால் வேலை நடக்காதே ! என்றிருக்கிறார்.அதற்கு கிராமத்தான் அதற்காகத்தான் அதன் கழுத்தில் மணிகட்டியுள்ளேன். அது சுற்றாமல் நின்றால் மணிச்சத்தமும் நின்று விடும். நான் எழும்பிப்போய் மாட்டை மீண்டும் சுற்றவிடுவேன் என்றானாம். மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு கழுத்தை ஆட்டினாலும் மணிச்சத்தம் கேட்குமே அப்போது என்ன செய்வாய் என படித்தவர் கேட்டுள்ளார். ஐயா அதை நான் அந்த அளவுக்கு படிக்க வைக்கவில்லை.அதற்கு கள்ளம் கபடம் தெரியாது என்றானாம்.

அது போல் அந்த மக்களுக்குத் தெரியும் பாதை திறந்தவுடன் வரும் முதல் வாகனம் முஸ்லீம் களுடையதாகத்தான் இருக்கும் என்று.

மொனறாகலை, பிபிலை ,பதியத்தலாவ,பதுளையிலிருந்து சுருட்டு,புகையிலை,சின்ன வெங்காயம் ,உறுண்டைகிழங்கு வாங்கவும் கண்டி, கொழும்பு, கேகல்லவிலிருந்து வாகனங்கள் வாங்கிவிற்கவும் நீர்கொழும்பு, புத்தளம் ,அனுராதபுரத்திலிருந்து கடலட்டை, நண்டு ,கணவாய் என்பன வாங்கவும் துள்ளித் தெறித்து வந்து அந்த வன்னிமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகின்றவர்கள் இந்த முஸ்லீம்கள்தான் என்று அந்த வன்னி மக்களுக்குத் தெரியும்.

மீண்டும் அந்த மக்களின் காலைவாரி, வடிவேல் பாணியில் உசுப்பேத்தி, உசுப்பேத்தி அந்த மனிதப்புனிதர்களை கொன்றுவிடாதீர்கள்.

வெள்ளந்திரியான அந்த அப்பாவி வன்னி மக்களை , வேட்டை நாய்களாகப் பாவித்து , வேள்வித் தீ நடத்தி ,இன்று வெட்கித்தலை குனியும் படியாக நாளுக்கு 20,30 என அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு கண்ணீரும் கம்பலையுமாகவரும் அந்த வன்னிமக்களுக்கு நாம் எப்போதும் துணைநிற்போம்.

ஆனால் அனைத்தையும் , அனைத்தையும் இழந்த அந்த யாழ்மாவட்ட முஸ்லீம்களுக்காக எப்போதாவது எந்த சந்தர்ப்பத்திலாவது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் அல்லது ஒரு உறுப்பினர்.அல்லது ஒரு நாய்.அல்லது ஒரு காக்காய்.அல்லது ஒரு குருவியாவது குரல் கொடுத்ததா ?

- யஹியா வாஸித்

No comments: