சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.
இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.
இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்கள். இவ்வளவு சாமியார்கள் இருப்பதால் அங்கே எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் கமழுமென்றுதான் பக்தகோடிகள் எதிர்பார்ப்பார்கள்.
சுற்றுலா பக்தர்கள் கொட்டும் பணம் எனும் லவுகீகம் உப்புச்சப்பற்ற அந்த ஆன்மீகத்தைக் கொள்ளை கொண்டுவிட்டபடியால், அயோத்தி சாமியார்களுக்கிடையே குழாயடிச் சண்டையல்ல, கொலைவெறிச் சண்டையே நடக்கிறது. சாமியார்களில் பீகாரிலிருந்து வந்த பார்ப்பன மற்றும் பூமிகார் மேல்சாதியைச் சேர்ந்த சாமியார்கள் மற்றும் மடாதிபதிகள் 25,000 பேர் இருக்கின்றனர். பீகாரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காக இந்தியா முழுவதும் நாடோடிகளாக அலையும் போது, பார்ப்பன மேல்சாதி தொந்திகள் மட்டும் அயோத்தியில் நோகாமல் கல்லா கட்டி காலம் தள்ளுகின்றனர்.
திருவாடுதுறையின் முன்னாள் சின்ன ஆதீனம் தன்னைக் கொல்ல முயன்றதாக தற்போதைய பெரிய ஆதீனம் குற்றம் சாட்டியிருந்த கதையெல்லாம் அயோத்தியைப் பொருத்தவரை ஒன்றுமேயில்லை. அங்கே மடங்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு பீகாரிலிருந்து அடியாள் கும்பல்கள் மடாதிபதிகளால் வரவழைக்கப்படுகின்றன. போலீசின் பதிவுப்படி கடந்த பத்தாண்டுகளில் உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தில் மட்டும் இந்த சொத்துப் பிரச்சினைகளுக்காக நடந்த மோதலில் 150 மடாதிபதிகள் அல்லது சாமியார்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது ஒன்றும் ஐ.எஸ்.ஐ.யோ, லஷ்கர்இதொய்பாவோ செய்த சதியல்ல. காவி உடுத்திய சாதுக்கள் தங்களுக்கிடையே நடத்திய பச்சைக் கொலைகள். அயோத்தியில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் 20 சாமியார்கள் சக சாமியார்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இராம ஜென்ம பூமிக்கே இதுதான் கதியெனும்போது, இந்தியா முழுவதும் இராமராஜ்ஜியம் வந்தால் நம் கதி?
அயோத்தி நகரில் மட்டும் எல்லாம் வல்ல இறைவனை நம்ப முற்றும் துறந்திருக்கவேண்டிய இம்முனிவர்களில் 350 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறார்களாம். ஒரு கையில் தண்டம், மறுகையில் துப்பாக்கி! முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் உ.பி.மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்த சமயத்தில், பைசலாபாத் மாவட்ட நிர்வாகம் குற்றப் பின்னணி உள்ளோரின் பட்டியலைத் தயாரித்த போது, அதில் இடம்பெற்ற அயோத்தி சாமியார்களின் எண்ணிக்கை 86! குற்றங்களைச் செய்து விட்டு மடங்களில் புகுந்துவிட்டால் போலீசு வரமுடியாது என்ற நிலைமையே இதன் பின்னணி. அப்படி போலீசு புகுந்து சிதம்பரத்தில் தீட்சிதர்களைக் கொத்துக் கொத்தாக தூக்கியது போல செய்தால், விசுவ ஹிந்து பரிஷத் உடனே இந்து மதத்திற்கு வந்த அநீதி என்று களமிறங்கிவிடும். எனவே, சாதா ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் போலீசு, சாமியார் ரவுடிகளைக் கைது செய்யவே அஞ்சுகிறது!
ஆர்.எஸ்.எஸ்இன் இராம ஜென்ம பூமி இயக்கத்தால் இந்து மதவெறியர்களுக்குக் கிடைத்த அரசியல் ஆதாயத்திற்கு நிகரான செல்வாக்கை, இந்தக் கிரிமினல் சாமியார்களும் பெற்றிருப்பதால் மாவட்ட நிர்வாகம் மடங்களுக்குள் நுழைவதற்குத் தயங்குகிறது. சமீபத்தில் அப்படி ஒரு கிரிமினல் சாமியார் கும்பலைத் தேடி உ.பி.மாநில அதிரடைப்படை நுழைந்த போது இந்து மதவெறியர்கள் எதிர்த்தார்கள். அதிரடிப் படையே தேடுமளவுக்கு அந்தக் கும்பல் என்ன குற்றம் செய்தது? கோண்டா ஊரில் உள்ள ஒரு கிராம வங்கியில் பத்து இலட்சம் ரூபாயை மடாதிபதி அருண் சாது கும்பல் கொள்ளையடித்துவிட்டு மடங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறது. இதே கும்பல் மிரட்டிப் பணம் பறிப்பதும், முக்கிய நபர்களைப் பிணையக் கைதிகளாகக் கடத்திப் பணம் பறித்து வந்ததும் தற்போது அம்பலமாயிருக்கிறது. கோவில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்கு பிற மடாதிபதிக் கும்பல்களுடன் இந்த அருண் சாது கும்பல் அயோத்தியில் நடத்திய சண்டைகள் அங்கே பிரபலம்.
இந்தச் சொத்துப் பிரச்சினைகளுக்காக சாமியார் கும்பல்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும், குண்டு வீசிக் கொள்வதும் நிறைய நடந்திருக்கின்றன. பல கோவில் பூசாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அயோத்தியில் இந்தச் சண்டைகள் முடிவின்றி நடைபெறுகின்றன. அந்த வட்டாரத்தில் நடைபெறும் குற்றங்களின் மையமாக அயோத்தி மடங்கள் இருக்கின்றன. பல மடாதிபதிகள் பீகாரிலிருந்து அடியாட்களை வரவழைத்து மடங்களில் நிரந்தரமாக வைத்துக் கொள்வதும், பின்னர் தொழில்முறைக் குற்றங்களைச் செய்து பணம் சம்பாதிப்பதையும் தொழிலாகச் செய்து வருகின்றனர். சியாம் மஹாராஜ் எனும் மடாதிபதியின் கும்பல் கான்பூர் தொழிலதிபர் ரவீந்தர் கேடியாவை கடத்தி 18 இலட்சம் பெற்றுக் கொண்டே விடுவித்திருக்கிறது.
இவையெல்லாம் போக இராம ஜன்மபூமி ட்ரஸ்ட்டின் தலைவரான இராம் விலாஸ் வேதாந்தியைப் பற்றி புதிய ஜனநாயகத்தில் முன்னர் எழுதியிருந்தோம். சேது சமுத்திரப் பிரச் சினைக்காக கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்ன இவர்தான், முசுலீம்களுக்கு எதிரான துவேசத்தைப் பிளறுவதில் பிரபலமானதோடு ஹவாலா மோசடிகளுக்கும் பெயர் பெற்றவர். இவர் சில்லறைச் சாமியார் இல்லையென்பதால், மேல்மட்ட அளவில் முதலாளிகளின் கருப்புக் கோடிகளை வெள்ளையாக மாற்றுவது முதலான சேவைகளைப் பக்த கோடிகளுக்கு கச்சிதமாக செய்து வருகிறார்.
அயோத்தியின் கிரிமினல் புராணம் இதுதான். இந்தச் சாமியார்களை வைத்துதான் விஸ்வ இந்து பரிஷத் தர்மசன்சாத் எனும் மடாதிபதிகளின் பேரவையைக் கூட்டி பாபர் மசூதி இடிப்பு முதலான அக்கிரமங்களுக்கு நாள் குறிக்கிறது. காசு பணத்துக்காகத் தங்களுக்குள்ளேயே இரத்தக் கவிச்சியோடு கொலை செய்யும் இவர்கள்தான் இந்து மதவெறியைக் கிளப்புவதையும், முசுலீம் மக்களை வன்மம் கொண்டு மிரட்டுவதையும் செய்கிறார்கள் என்பது முக்கியமானது. வன்முறையும், துவேசமும், வெறியும் இவர்களது தொழிலிலும், இரத்தத்திலும் கலந்திருக்கிறது. இந்த காவிக் கயவர்களைத்தான் இந்து தர்மத்தின் இரட்சகர்களாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்னிறுத்துகிறது. சாதியக் கொடுங்கோன்மையை ஆன்மாவாக வரித்திருக்கும் இந்து தர்மத்திற்கு இந்த ஆன்மீக அடியாட்கள் பொருத்தமாகத்தான் இருக்கிறார்கள்.
வட இந்திய சாமியார்கள் என்றால் ஏதோ கஞ்சாவைப் புகைத்துக் கொண்டு, அரைமுக்கால் நிர்வாணத்தில் ஜடா முடியோடு அலைபவர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சாதா ரவுடிகளையாவது சட்டென்று அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால் காவி ரவுடிகள், மடத்துப் பெருச்சாளிகளாக ஊர் சொத்தைக் கொள்ளையடிப்பதை அவ்வளவு சுலபத்தில் அடையாளம் காண முடியாது. எனினும் அயோத்தி புராணம் காவித் திரையை விலக்கி, மடாதிபதிகள் என்று அழைக்கப்படும் ரவுடிகளைத் தெளிவான விசுவரூப தரிசனமாகக் காட்டுகிறது. பக்த கோடிகள் முட்டாள்தனமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளாமல் கம்பை எடுத்தால் அயோத்தி முதல் காஞ்சி வரை அலப்பரை செய்யும் ஆன்மீக ரவுடிகளை ஒழித்துக் கட்டலாம்.
• பச்சையப்பன்
நன்றி: http://www.tamilcir cle.net/index. php?option= com_content&view=article&id=3643:2008- 09-06-19- 13-09&catid=68:2008&Itemid=30
Saturday, September 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment