Tuesday, January 10, 2012


சமஸ்கிருதம்தான் இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் மொழியா?: கே.எம்.கே!

"சமஸ்கிருதம் இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் மொழி" என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்றுக்கு எதிராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் காதர் மொஹிதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், புதுடெல்லியில் 06-01-2012ல் நடைபெற்ற 15-வது உலக சமஸ்கிருத மாநாட்டில் உரையாற்றும்போது, சமஸ்கிருதம்தான் இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் மொழி என்று கூறியிருக்கிறார்.

அதற்குரிய ஆதாரமாக, சமஸ்கிருதம், ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ, சொந்தமானது அல்ல; உலகச்செம்மொழிகளில் முதன்மையானது. மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது; இந்த மொழியில் தோன்றிய ஞானிகள், விஞ்ஞானிகள், இலக்கண வல்லுநர்களாகத் திகழ்ந்த கௌடிளியா, சரக்கா, சுஸ்ரூதா, ஆரியபட்டா, வராஹமிஹிரா, பிரம்மகுப்தா, பாஸ்கராச்சாரியா போன்றவர்களின் பங்களிப்பை உலகம் இன்னும் அறியாமல் இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருதம், பேச்சு வழக்கு ஒழிந்த மொழியானாலும், தொன்மையான மொழி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், இந்தியாவின் உணர்வை பிரதபலிக்கும் மொழி சமஸ்கிருதம் என்று பிரதமர் கூறுவது வரலாற்றுத் திரிபாகும்.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை கூறியது போல, இந்திய வரலாற்றைக் கங்கைக் கரையில் இருந்து துவங்காமல், காவிரிக் கரையிலிருந்து துவங்கி எழுதப் பெற்றிருக்குமானால், பிரதமர் சமஸ்கிருதம் பற்றி இவ்வாறு கூறியிருக்க மாட்டார்; இந்தியாவின் உணர்வை உலகுக்குத் தெரிவித்தது தமிழ்ச் செம்மொழியே
என்று அறிவித்திருப்பார்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர் - ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்று பேசும் வழக்கு தமிழகத்தில் இன்று நேற்றல்ல; காலத்தைக் கணிக்காத காலத்தில் இருந்தே யாதும் ஊர் என்றும், யாவரும் கேளிர் என்றும் கூறியது தமிழ் மொழி தான் என்பது வரலாற்று உண்மையாகும்.

சமஸ்கிருத மொழியில் உள்ள `வசுதைவ் குடும்பகம்' - உலகம் ஒரே குடும்பம் என்னும் கருத்து, தமிழ் மொழியில் இருந்து சமஸ்கிருதம் சென்று அடைந்த கருத்தே என்பதை வரலாறு கூறிக்கொண்டிருக்கிறது.

மொழிகளுக்கும் இடையில் ஒப்புமை குறித்து ஆய்வு நடத்தியுள்ள சபியா நூர் என்னும் அறிஞர் தனது மறுபக்கம் - 20 வருட ஆய்வு நூலில் கூறியிருப்பதை இங்கே மேற்கோள் காட்டுவோம்:

சமஸ்கிருதம் என்று நாம் அழைக்கும் மொழி இந்தியாவிற்குள் நுழைந்த பண்டைய ஆரியர்களால் பேசப்பட்ட மொழி அல்ல. அவர்கள் பல குழுக்களாக, குலங்களாக பல கால கட்டங்களில் வந்தார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கொச்சை பாஷை பேசினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் காலம் சென்ற பி. ராமமூர்த்தி பிறப்பால் பிராமணர். சமஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தவர். அவரின் கட்டுரையில் கூறுகிறார், பிராமணர்கள் சமஸ்கிருதம் என்ற செயற்கை மொழியை உண்டாக்கினர்.

அதற்கு அந்த காலகட் டத்தில் பேசப்பட்டு வந்த மொழிகளிலிருந்தே சொற்களைக் கடன்வாங்கி உருவாக்கினர். உலகிலுள்ள மொழிகளிலேயே மிகவும் கஷ்டமான இலக்கணம் ஒன்றையும் உண்டாக்கினர். சமஸ்கிருதம் என்ற சொல்லே ஒரு கூட்டுச் சொல்லாகும். அதாவது சம்யம் - கிருதம் நன்கு அமைக்கப்பட்டது என்று அர்த்தமாகும். முதல் வேதம் என்னும் ரிக் வேதத்தை படித்தால் அதன் முதல் பகுதி சுத்தமான சமஸ்கிருத மொழியில் இல்லை. ஆதிகால மக்கள் பேசிய கொச்சை மொழியில் உள்ளது என்கிறார். (தினமலர், வாரமலர் 5, நவம்பர் 2000 பக்கம் 9.). சங்க இலக்கியங்களில் குறுந்தொகையும் ஒன்றாகும். பெண்ணின் பால் மோகம் கொண்ட திராவிடன் ஒருவன் இதற்கு மருந்து உண்டா என்று பார்ப்பனனிடம் கேட்கிறான்.

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! ..............

படிவ உண்டிப் பார்ப்பன மகனே!

எழுதாக் கற்பின் நின்சொல் லுள்ளும் பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ...........(156)


- இந்தப் பாடலில் வரும் எழுதாக் கற்பின் என்பதின் அர்த்தம் எழுதப்படாத கல்வி என்பதாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்தில்கூட சமஸ்கிருதத்திற்கு எழுத்தில்லை என்பது தெளிவாகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சமஸ்கிருத எழுத்து இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடையாது.

சமஸ்கிருதம் என்று தனி மொழி ஒன்று கிடையாது. அவர்கள் பேசிய கொச்சை மொழியோடு திராவிட சொற்களை கலந்து அவர்கள் உருவாக்கியதுதான் சமஸ்கிருதம் (சமஸ்தம் - யாவும் , கிருதம் - சேர்த்து) என்ற மொழியாகம் என்கிறார் தந்தை பெரியார். வேதங்களை இயற்றிய ஆரியர்களுக்கு எழுத்துக்கள் தெரியாது என்கிறார்கள் வில்டூரண்ட், எச்.ஜி.வெல்ஸ் போன்ற ஆய்வாளர்கள். ஆரியர்கள் திராவிடர்களோடு பரவி, நாகரீக மக்களாக விளங்கிய திராவிடர்களின் எழுத்துக்களைப் பயன்படுத்தியே அவர்கள் எழுத்துக் களையே உருவாக்கிக் கொண்டனர் என்கிறார் ஈராசு பாதிரியார்.

ரிக் வேதத்தில் எராளமான தமிழ்ச் சொற்கள் உள்ளதை பல அறிஞர்கள் கூறுகிறார்கள். சமஸ்கிருதம் என்பது பிராக்கிருதம், பாலி, தமிழ் கலந்து உருவான மொழி என்கிறார்கள் கார்டுவெல். எமினோ போன்ற தலைசிறந்த மொழி ஆய்வாளர்கள் சமஸ்கிருதம் ஏராளமான தமிழ்ச் சொற்களை கடன்வாங்கியுள்ளது.

அதனால் தான் அது செழுமையுற்றது என்று சமஸ்கிருத தமிழ் மொழி ஆய்வாளர் தாமஸ் பரோ கூறுகிறார். சமஸ்கிருதம் என்பது பின்னாட்களில் தமிழால் செம்மையடைந்தது என்ற கருத்தை ஏராளமான ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (பக்.247 -248). தமிழ் மொழி அறிஞர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் மொழி ஞாயிறுகளும் தத்தமக்குள் கித்தாபுகளைப் பேசிக் கொண்டும், ஏசிக் கொண்டும் காலத்தை ஓட்டி விட்டனர்; தமிழ்தான் உலக மொழிகளின் தாய்மொழி என்பதை அறிந்தும் அகிலத்துக்கு அறிவிக்காது இருக்கிறார்கள்.

உறங்கும் தமிழ்மொழி பற்றாளர்கள் உலகிற்கு உண்மையை உரைப்பது எக்காலமோ?"
என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் கூறினார்.

No comments: