Monday, November 24, 2008

ஊடகங்கள், முஸ்லிம்கள் மற்றும் முஜாஹிதீன்!




இது குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்துத்துவ பயங்கரவாத சாமியாரிணி கும்பல் கைது செய்யப்படுவதற்கு முன் வெளியான கட்டுரை!

டெல்லி காவல்துறை குண்டுகள் வெடிக்கும் 'மர்மத்தை கண்டு பிடித்து' விட்டதால் நான் எனது சுய வாக்குமூலத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். சந்தேகப்படுவது இந்திய அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமை அல்ல என்றாலும் செழிப்பான ஜனநாயக அமைப்பிலிருந்து பிரிக்க முடியானதொரு அங்கம் அது. நமது உளவுத்துறை அமைப்புகளின் அஸ்திவாரம் சந்தேகப் படுவதில்தான் இருக்கிறது எனலாம். எனவே, யார் மேல் வேண்டுமானாலும் சந்தேகப்படும் உரிமை நிச்சயமாக நம் உளவுத் துறையினருக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதே சந்தேகப்படும் உரிமை சாதாரண இந்தியக் குடிமகனுக்கு இருப்பதையும் யாராலும் மறுக்கவியலாது. சமத்துவம் ஜனநாயகத்தின் அடையாளமல்லவா?


கேள்விகள் கேட்டு பதில் விளக்கங்கள் பெற வாய்ப்பில்லாத ஓர் அரசாங்க அறிக்கை வேதவாக்குப் போலக் கருதப்படும்போது என்னுள் இருக்கும் 'பத்திரிக்கையாளனுக்கு' எரிச்சல் ஏற்படுகிறது. தீர்மானமான முடிவுகளுக்கு வருவது ஊடகவியலாளர்களின் பணி அல்ல. ஒரு சமுதாய வட்டத்திற்குள் நிகழ்பனவற்றை அந்த வட்டத்திற்கு வெளியில் நின்று விருப்பு வெறுப்பின்றி ஊடகத்தில் பதிவுசெய்வதுதான் அவரது பணியாக இருக்க வேண்டும். ஒரு பத்திரிக்கையாளர் அந்த வட்டத்திற்குள் நுழைந்தால் அவரும் அந்த நிகழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விடுகிறார். ஒரு தரப்பினருடன் நெருக்கமாக இருப்பது சார்பு நிலையைத் தோற்றுவிக்கும். சார்பு நிலை மறுதரப்பினரின் நியாயங்களைப் பார்க்க முடியாத குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஓர் உண்மையான பத்திரிக்கையாளர் இது போன்றதொரு கருத்துக் குருடராக இருக்கவே கூடாது.

மக்களிடையே பொதுவான அபிப்ராயங்களை உருவாக்குவதில் ஊடகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதானால், அவற்றிடையே 'கருத்துக் குருட்டுத் தன்மை' நிலவுவது பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்தியறிக்கையும் பொது மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நாட்டின் அரசியலமைப்பில் 'நான்காம் தூண்' என்று கருதப்படும் ஊடகங்கள், ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் 'நான்காம் தவறு' என்று சொல்லத்தக்க விதத்திலேயே செய்திகளை வெளியிடுகின்றன. குண்டு வெடித்தது மக்கா மசூதியாக இருந்தாலும், தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்ட மாலேகானாக இருந்தாலும், சந்தேக முள் தானாகவே சாய்வது முஸ்லிம்கள் பக்கம் தான். ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் அலைக்கழிக்கப்படுவதும் முஸ்லிம்கள்தான். ஒரு புறம் குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயங்கரவாதிகள், மற்றொரு புறம் உளவுத் துறை அமைப்புகள் என இருபுறமும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலையில் முஸ்லிம்கள். இந்த இரு தரப்பினருமே முஸ்லிம்களை நம்புவதில்லை என்பதுதான் பரிதாபம். அன்றாட வாழ்க்கைப் பாட்டை தீர்ப்பதற்கே போராடும் முஸ்லிம்களுக்கு குண்டுகளைப் பற்றி சிந்திப்பதற்குக்கூட நேரம் கிடையாது என்பது ஏனோ இவர்களுக்கு புரிவதேயில்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பும் இஸ்லாம் எனும் 'பச்சைக் கண்ணாடி' கொண்டே பார்க்கப் படுகிறது. ஆனால், 'இந்துத்துவ காவி' இந்தியாவை 'சிவப்பாக' மாற்றுவதில் சற்றும் சளைத்ததல்ல. குண்டுகள் வெடிப்பதற்கான காரணங்களுள் ஒன்று, இந்திய முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பற்ற அச்ச உணர்விலேயே நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பதுதான். உண்மையான போர் துவங்குமுன் மனதளவில் எதிர்தரப்பினரை வலுவிழக்கச் செய்யும் உத்தி இது.

இந்திய முஸ்லிம்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் தீவிரவாதிகளாக்கப்பட்டது உண்மையாக இருக்கலாம். அதே போன்று இந்துக்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் அதிதீவிரவாதிகளாக இருப்பதும் உண்மையே! சிமி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை தத்தம் சமுதாயங்களை பிரதிநிதிப்பதாக சொல்லிக் கொண்டாலும் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட அடையாளங்களை கொண்டவை. செயல்வடிவிலான அதிதீவிரவாதத்தை இவ்வாறு ஒரு வரியில் சுருக்கிச் சொல்லலாம்: "உனது தீவிரவாதத்தை விட எனது தீவிரவாதம் சிறந்தது!"

ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை குண்டுவெடிப்புகளில் ஈடுபடும்போது இந்திய ஊடகங்கள் 'அடக்கி வாசிப்பதை'க் காண்கிறோம். அதே சமயத்தில் ஒரு வழக்கில் சிமி-யின் பெயர் அடிபட்டால் 'பத்திரிக்கைத் தர்மம்' உச்ச வேகத்தில் வெளிப்படுவதையும் காண்கிறோம். இந்த இரண்டு வித்தியாசமான அணுகுமுறைகளுக்கும் காரணம் வியாபாரம்தான். எந்தப் பத்திரிக்கை முதலாளியும் பெரும்பான்மையான இந்து வாசகர்களைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார். ஊடகங்கள் தங்களை தேசிய சிந்தனை கொண்டவர்களென உரிமை கொண்டாடினாலும், நடைமுறையில் அவை பெரும்பான்மையினரை திருப்திப் படுத்தும் நோக்கம் கொண்டவைதான்.

காவல்துறை 'குற்றம் சாட்டப்பட்ட' நபர்களின் பெயர்களை திடீர் திடீரெனெ மாற்றுவது, ஒரு பத்திரிக்கையாளனின் கண்ணோட்டத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக இருக்கிறது. ('குற்றம் சாட்டப்பட்டவர்' என்ற பெயர்ச்சொல் இந்திய ஊடகங்களில் மிக அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் வார்த்தைகளுள் ஒன்று!). குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி என முதலில் சொல்லப்பட்ட பெயர் அப்துல் சுப்ஹான் குரேஷி; அதுவே பிறகு போலி 'என்கவுண்டரில் கொல்லப்பட்ட' அதிப் என மாற்றப் பட்டது.

அஹமதாபாத் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர் என்று காவல்துறையினர் சொல்லும் முப்தி அபுல் பஷர்தான் டில்லி குண்டு வெடிப்புகளுக்கும் காரணகர்த்தா என்று சொல்லப்படுவதை ஒரு பத்திரிக்கையாளனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பஷர் உண்மையிலேயே டில்லி குண்டு வெடிப்புகளுடன் சம்பந்தப் பட்டிருந்தால் அது நிகழ்ந்திருக்கவே செய்யாது. ஏனெனில், அந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது பஷர் காவல்துறையின் பாதுகாப்பில்தான் இருந்தார். மதரஸாவில் மார்க்கக் கல்வி பயின்ற ஒரு ஏழையான பஷர் எப்படி அஹமதாபாத் குண்டுவெடிப்பை அவ்வளவு துல்லியமாக திட்டமிட்டு நடத்தியிருக்க முடியும்? இந்திய மதரஸாக்கள் எப்போதிலிருந்து இதுபோன்ற 'தொழில்நுட்ப வல்லுனர்'களை உற்பத்தி செய்யத் தொடங்கின? அவ்வாறு நடக்குமானால் அது இந்திய அரசிற்கு மிக மகிழ்வைத் தரும் ஒன்றாக இருக்கும். மதரஸாக்களை மேம்படுத்த வேண்டிய தேவை மத்திய மதரஸா வாரியத்திற்கு இனி இருக்காது.

'நன்கு படித்த முஸ்லிம்கள்தான் குண்டு வெடிப்புகளில் ஈடுபடுகிறார்கள்' எனக் காவல்துறையினர் சொன்னாலும், 'படித்தவர்கள்' என்று எவ்வகையிலும் சொல்ல முடியாதவர்களைத்தான் அவர்கள் கைது செய்கிறார்கள். முப்தி பஷர் இதற்கு சரியானதொரு உதாரணம்.

இந்திய ஊடகத்துறையில் ஒரு பகுதியினர் உளவுத்துறை அமைப்புகளின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். காவல்துறையினரின் அறிக்கைகளை புலனாய்வுக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிடுகின்றனர். தொலைக்காட்சி நிருபர் ஒருவர் உளவுத்துறைக் குறிப்பு போன்றதொரு தகவலை வெளியிட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'நாடெங்கிலும் குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்பதற்காக 2001-ம் ஆண்டு சிமி அமைப்பு 200 இளைஞர்களை பணியிலமர்த்தியது' என்பதுதான் அந்த தகவல். இது உண்மையென்றால் நமது உளவுத்துறை அமைப்புகள் கடந்த 8 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தன?

முறையான விசாரணகள் நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை பதியப்படுமுன்னரே, காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் 'தீவிரவாதிகள்' என முத்திரை குத்தப்படுகின்றனர். சட்டமும் நீதிமன்றமும் அதன் பணியைத் தொடங்குமுன்னரே ஊடகங்கள் தீர்ப்பை வழங்கி விடுகின்றன. உதாரணமாக, "கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்ட தீவிரவாதி சைஃப் ஒரு போலி வாக்காளர் அட்டை வைத்திருந்தான்" (டைம்ஸ் ஆஃப் இந்தியா, செப் 21, பக்கம் 1, டெல்லி பதிப்பு).

ஊடகங்களின் 'முன்முடிவுத் தீர்ப்பு'களுக்கு இது ஒரு சிறந்த உதாரணமல்லவா?

இந்த அநீதிகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, முஸ்லிம்களோ அச்சத்தால் சூழப்பட்டவர்களாகவே தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். "அரசு என்பது ஒருங்கமைக்கப்பட்ட வன்முறை" என்று சொன்னார் காந்திஜி. டெல்லி ஜாமியா நகரில் நிகழ்த்தப்பட்ட போலி என்கவுண்டர் சம்பவம், சில குழப்பமான கேள்விகளை எழுப்புகிறது. 'இந்த சம்பவமே சந்தேகத்திற்கிடமானது' என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் இல்லாமலில்லை. உள்ளூர்வாசியான சகோதரி ஒருவர் சொன்னார், "எதிர் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதை யாரும் பார்க்கவில்லை. காவல்துறையினர்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார்கள். எதிர்தரப்பினர் சுட்டதை யாராவது பார்த்ததாக எந்தப் பத்திரிக்கையிலாவது செய்தி வந்ததா?" அவர் மேலும் கேட்டார், "தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவ்வளவு காவலையும் மீறி எப்படி தப்பித்துச் சென்றார்கள்? அந்த வீட்டிலிருந்து வெளியேற ஒரே ஒரு வழிதானே இருந்தது? என்கவுண்டர் நடக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பது காவல்துறையினருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் அவர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது ஏன்?"

அவர் மேலும் சொன்னது ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு பயங்கரமானதாக இருந்தது; "இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அவர்கள் (காவல்துறையினர்) யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கொலை செய்யலாம். இன்று அந்த இளைஞர்களுக்கு நேர்ந்தது நாளை என் சகோதரனுக்கு நேரலாம். ஏதோ ஒரு உப்புப்பெறாத காரணத்திற்காக, தான் நிரபராதி என்று நிரூபிக்கக்கூட அவகாசம் தரப்படாமல் அவன் கொல்லப் படலாம். அவர்கள் உங்களைக் குற்றவாளி என்று சொன்னால் நீங்கள் குற்றவாளிதான். மறுபேச்சிற்கே இடமில்லை. இது என்னைக் கடும் கோபத்திற்குள்ளாக்குகிறது"

இந்திய முஸ்லிம்கள், அச்ச உணர்வு, பாதுகாப்பற்ற சூழ்நிலை, ஆட்சியாளர்களின் பாரபட்ச போக்கு ஆகியவற்றோடு தீவிரவாத முத்திரையையும் சுமந்தவர்களாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 'முஸ்லிம்கள்' என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிறு கும்பல் அவர்களின் வாழ்க்கை மற்றும் மதநம்பிக்கைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. 'குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள்' என்று யாராவது சொல்லும்போது என்னுள் வெறுப்புணர்வுதான் ஏற்படுகிறது. 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அடையாளம் தெரியாத ஒரு அமைப்பு, இந்திய முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற ஒளிவுமறைவு 'ஜிஹாதை' நடத்துகிறதாம். ஓர் உண்மையான ஜிஹாத் போராட்டம் ஒளிவுமறைவாக நடக்கவே முடியாது. இஸ்லாமிய சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அநீதிக்கெதிரான ஜிஹாத் போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட முறையிலேயே வெளிப்படையாக நடத்தப்பட்டனவே தவிர, அவை அடையாளம் தெரியாத நபர்களால் ஒருபோதும் நடத்தப் பட்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் நம் நாட்டில், நாட்டைக் கொலைக்களமாக மாற்றத்துடிக்கும் ஒரு சிறு கொலைகாரக் கும்பலை காவல்துறையினரால் வளைத்துப் பிடிக்க முடியவில்லை என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. இந்திய உளவுத்துறையினரின் கைவசம் ஏராளமான தகவல் சாதனங்களும் துப்புகளும் இருந்தும், பயங்கரவாதச் செயல்களை முறியடிப்பதில் அவர்களின் செயல்பாடுகள் பூஜ்யமாகவே இருக்கின்றன.

இந்தியாவின் 16 கோடி சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இருக்கும் பிரச்னை ஒன்று; அச்சவுணர்வுதான் அது! அவர்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்கவும் யாரும் தயாராக இல்லை. இந்தியாவில் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் முஸ்லிம்கள் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னைக்கான தீர்வின் ஓர் அங்கமாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களேயல்லாது பிரச்னையின் ஒரு அங்கமாக அல்ல. இந்தியா அவர்களையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.

ஒரு முஸ்லிம் நண்பர் மூடி மறைக்காமல் சொன்னார், "கவி ரவீந்திரநாத் தாகூரின் 'மனம் அச்சமில்லாமல் இருக்கும்போது' எனும் கவிதை வரிகள் இப்போதெல்லாம் என் வீட்டுச்சுவரை அலங்கரிப்பதில்லை".


நன்றி: - முபஷ்ஷிர் முஷ்தாக்

தமிழில்: சகோ. ஸலாஹுத்தீன்.

No comments: